சென்னை: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த முழு ஊரடங்கில், இன்றுமுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், ஏராளமானோர் வெளி இடங்களுக்கு செல்ல இ-பதிவு செய்ய அரசின் இ-பதிவு இணையதளத்தை நாடியதால், இணையதளம் முடங்கி உள்ளது. அதை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் 2 வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இன்றுமுதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாடகை கார்களில் மூன்று பயணிகள், ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுத் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதுடன், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், இ-பதிவு முறை கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுயதொழில்புரிவோர் வேலைக்காக வேறு இடங்களுக்கு செல்வதற்கும் இ-பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று தளர்வுகள் வந்ததும், ஏராளமானோர் சுயதொழில் புரிவோர், வாகனங்களில் அண்டை மாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக செல்ல விரும்புவோர் என ஆயிரக்கணக்கானோர் இ.பதிவு செய்ய இணையதளத்தை நாடியதால், இணையதளம் முடங்கியது. இதனால், பலர் இ-பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இணையதளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.