தோல்கா, குஜராத்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு அதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி தாவல் ஜானியை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மூத்த பாஜக அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஸ்வின் ராதோட் என்பவரை விட 327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதை ஒட்டி ராதோட் மறு எண்ணிக்கை கோரியதை ஆணையம் ஒப்புக் கொண்டது.

இந்த மறு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தாவல் ஜானி பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாகவும் மொபைல் போனை பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் தாவல் ஜானி மீது தேர்தல் ஆணையம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மறு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது தோல்கா தொகுதியில் தேர்தல் அதிகாரியாக தாவல் ஜானி நியமிக்கபட்டுள்ளார். உயர்நீதிமன்ற அறிவிப்பை தொடர்ந்து ஜானியை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. அவருக்கு எவ்வித பொறுப்பும் அளிக்காமல் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த இட மாற்றம்  குறித்து தாவல் ஜானி இது வழக்கமான இட மாறுதல் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இது வழக்கமான இட மாறுதல் இல்லை எனவும் இது தண்டனை என்பதால் தான் அவரை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.