டில்லி:

.பி. மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ ஜோடிக்கப்பட்ட வீடியோ என்று தேர்தல் ஆணையம் ஸ்மிரிதி இராணிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

நேற்று நாடுமுழுவதும் 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் போட்டியிடும் அமேதி, சோனியா போட்டியிடும் ரேபரேலி உள்பட, மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோவில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று அமேதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிரிதி இராணி, அமேதி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும், காங்கிரசார் வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர் என்றும் குற்றம் சாட்டினார். இதற்காக ராகுல் காந்தியின் ஆட்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார். அப்படி கூறியதோடு, இது தொடர்பாக மூதாட்டி ஒருவர் வெளியிட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், அந்த பெண், தான் பாஜகவுக்கு வாக்களிக்க இருந்ததாகவும், ஆனால், தன்னை காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்தினர் என்று கூறுவதாக அமைந்திருந்தது.  பெண்ணின் கையைப்பிடித்து கை சின்னத்தில் ஓட்டு போட்ட காங்கிரஸ்..  என்ற பெயரில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக ஸ்மிதிரி இராணி தேர்தல் ஆணையத்திடம் டிவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு நடத்தி தேர்தல் ஆணையம், இது ஜோடிக்கப்பட்ட வீடியோ என்று அறிவித்தது. மேலும், இதுபோன்ற பொய் புகார்களை கொடுக்க வேண்டாம் என்று  மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு தேர்தல் ஆணையம் கண்டனமும் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  உத்தர பிரதேச மாநில தேர்தல் அதிகாரி,  இந்த புகார் பொய்யானது. இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேர்தல் மிக மிக பாதுகாப்பாக நடைபெற்றது என்றும்  அதேபோல் ராகுல் காந்திக்கு எதிரான புகாரையும் தள்ளுபடி  செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.