டெல்லி: தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கட்சித் தொண்டர்களின் வெற்றிக்கொண்டாட்டங்களை தடுக்க தவறும் அந்த பகுதி தேர்தல் அதிகாரி இடை நீக்கம் செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக வெற்றிபெறும் சூழல் உருவான நிலையில், திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதுபோல மேற்கு வங்க மாநிலத்தல்  திரிணாமுல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில்,  பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சித் தொண்டர்கள் பொது இடங்களில் கூடி ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி கட்சியினர் கொண்டாட்டங்களை நடத்தினால், அதை தடுக்க தவறும் அந்த பகுதி தேர்தல் அலுவலர் இடைநீக்கம் செய்யப்படுவார்  என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் ‘‘எந்த ஒரு மாநிலத்தில் எந்த ஒரு கட்சித் தொண்டர்களும் கரோனா கட்டுப்பாடுகளைத் தாண்டி கொண்டாடங்களில் ஈடுபடக்கூடாது. இதற்கு அந்த கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். விதிமுறையை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியுள்ளது.