பெங்களூரு
எக்ஸ் வலைத்தளத்துக்கு கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. வீடியோவில், இடஒதுக்கீடு மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களுக்கே ஆதரவாக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
எனவே பா.ஜ.க. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. பாஜக கலவரத்தைத் தூண்டி பகையை வளர்க்க விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு கர்நாடக பா.ஜ.க.விற்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். ஆயினும் அந்த பதிவு நீக்கப்படாததால், கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.