மதுரை: திருமங்கலம் அருகே ஒரு குடோனில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் சிட்கோ சங்க நிர்வாக கட்டடத்திற்குள் ஏராளமான பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குவந்த தேர்தல் படையினர், அங்கு பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எவர்சில்வர் வாளி, கணினி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களை பறிமுதல்வர் செய்தனர். அந்த பரிசுப்பொருட்களில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு கூடிய அமமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர், அந்தப் பெட்டிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்யக் கோரி தேர்தல் அலுவலர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.