டெல்லி:  5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், பேரணிகளுக்கான தடையை பிப்ரவரி 11ந்தேதி வரை நீட்டித்து  அறிவித்து உள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 8.55 கோடிப்பேர். 80 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நன் பாதிக்கப்பட்டோர், கொரோனா தொற்று உடையவர்கள் தபால் ஓட்டை செலுத்தலாம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரம் ஆகியவை பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், பேரணிகளுக்கு தடைகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, வாக்கு சேரிக்கும் நடத்தும் பொதுக்கூட்டங்களில்வ  1000 நபர்களுடன் (ஏற்கனவே 500 நபர்களுக்குப் மட்டுமே அனுமதி) வரை பங்கேற்கலாம் என தெரிவித்து உள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களில்  நியமிக்கப்பட்ட திறந்தவெளியில் மட்டுமே கொரோனா நெறிமுறைகளுடன்  நடத்த அனுமதிக்கப்படும் என்றும், வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து  வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கான வரம்பு  ஏற்கனவே 10 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 10 பேருக்கு அனுமதி வழங்கி மொத்தம் 20 பேர் கூட்டமாக சென்று வாக்கு சேகரிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில், அரசியல் கட்சிகள் சாலைப்பேரணி, பாத யாத்திரைகள், சைக்கிள்/பைக்/வாகனப் பேரணிகள் ஆகியவற்றுக்கான தடையை பிப்ரவரி 11 வரை  நீட்டித்தும் உத்தரவிட்டு உள்ளது.