சென்னை:

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் முடிவடை யாத நிலையில்  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டார்.

அதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என்று கேட்டு தமிழக தேர்தல் ஆணையருக்கு  இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் ஆணையருக்கு தமிழக தேர்தல் ஆணையர் சாஹு அறிக்கை கேட்டுள்ளார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து டிவிட் செய்துள்ளார். அதில்,  திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக் குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘இதற்கிடையில் திமுக சார்பில் திருவாரூர் தொகுதியின் வேட்பாளராக பூண்டி கலைச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதுபோல  அமமுக சார்பில், அந்த மாவட்டத்தின் செயலாளரான எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.