புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அஷோக் லாவாசா, பிலிப்பைன்சில் செயல்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளார். அதன்பொருட்டு, அவர் தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
தற்போது, நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி வகிக்க, அவருக்கு கீழ் பதவி வகிக்கும் இரண்டு இதர தேர்தல் ஆணையர்களில் அஷோக் லாவாசாவும் ஒருவர்.
இவருக்கு, இன்னும் 2 ஆண்டுகள் பதவிகாலம் மிச்சமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர், 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வுபெற வேண்டும்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற முறையில், தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை இவர் நடத்துவார். ஆனால், இவர் தனது ஓய்வுகாலத்திற்கு முன்னதாகவே பதவி விலகுவதானது, இவருடன் பணியாற்றும் சுஷில் சந்திரா, தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கடந்த் 1973ம் ஆண்டு, அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நாகேந்தர் சிங், தனது பணிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்தார். சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். தற்போது அவருக்கடுத்து, ஓய்வுக்கு முன்னதாகவே, வேறு பதவியை ஏற்பதற்கு பதவி விலகும் இந்தியாவின் இரண்டாவது தேர்தல் கமிஷனர் ஆகிறார் அஷோக் லவாசா.