அலகாபாத்: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக தனக்கு ரூ.500 அபராதம் விதித்த காவல்துறைக்கு பாடம் புகட்டும் வகையில், காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை துண்டித்துள்ளார் மின் நிலைய அதிகாரி ஒருவர்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது; ஃபிரோஸாபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டவர் ஸ்ரீனிவாஸ் என்ற அந்த மின் நிலைய அதிகாரி.
தான் உள்ளூர் பகுதியில் பணி நிமித்தமாக சுற்றித் திரிவதால் தன்னால் இந்த சூழலில் ஹெல்மெட் அணிய முடியாது என்று காவல்துறையிடம் அவர் விளக்கம்கூறியும் கேட்க மறுத்த காவல்துறை அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தது. ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மின் கட்டண தொகையாக ரூ.6 லட்சம் பாக்கி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, காவல்துறைக்கு பாடம் புகட்ட நினைத்த ஸ்ரீநிவாஸ், அந்த காவல் நிலையத்திற்கான மின் இணைப்பை இந்த நிலுவைத்தொகையை காரணம் காட்டி துண்டித்துவிட்டார். சுமார் 4 மணிநேரம் மின்சாரம் இன்றி இருந்தது காவல் நிலையம்.
இந்த செயலை, தனது மேலதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்யாமல் ஸ்ரீனிவாஸ் சுய விருப்பத்தின் பேரிலேயே செய்ததாக குற்றம் சாட்டபப்படுகிறது. அதேசமயம், பல மின்நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.