கவுகாத்தி
இன்று காலை அசாம் மாநிலத்தில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி அதன் தாக்கம் வடகிழக்கு மற்றும் வடக்கு வங்க பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 7.51 மணி அளவில் அசாம் மாநிலத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் தேஜ்பூரில் இருந்து 43 கிமீ தொலைவில் மேற்கே மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நில நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 17 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. அதே வேளையில் தேசிய நில நடுக்க மையம் இந்த பூகம்பம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறது. இந்த நில நடுக்கம் அசாமில் மட்டுமின்றி வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சேதம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த வாரம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடந்த 5.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்துடன் தற்போதைய நிலநடுக்கத்துக்குத் தொடர்பு இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.