கிருஷ்ணகிரி: தமிழகம், கர்நாடகம் எல்லைப்பகுதியான ஓசூர் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 2.55 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியான ஓசூரில் தமிழகஅரசின் சோதனைச்சாவடி உள்ளது. அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இங்கு அனுமதிபெற்று செல்வது வழக்கம். அதுபோல, கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர விரும்பிய தமிழர்கள், அதுபோல, தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்ல விரும்பியவர்கள் அனைவரும் ஓசூரில் உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடிச் சென்று விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்று வந்தனர். இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுமட்டுமின்றி, வாகனங்களுக்கு தற்காலிக பர்மிட் வழங்க அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்சஒழிப்புத்துறைக்கு புகார் குவிந்தன.
இதையடுத்து, இன்று அதிகாலை 5 மணி அளவில் ஜுஜுவாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை புகுந்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத ரூபாய் 2.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.