சென்னை: தமிழ்நாட்டின் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் பெயரில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், திரையுலகைக் சேர்ந்த வடிவேலு, இசையமைப்பாளர் தேர்வா உள்பட பலருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தறைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி டாக்டர் பட்டங்கள் ரூ,25000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு ரூ.25ஆயிரம் விலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பிப்ரவரி 26-ம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது மற்றும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இசை அமைப்பாளர் தேவா, நகைச்சுவை நடிகர் வடிவேல், நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றநீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டங்கள் போலியானது என தகவல்கள் பரவியது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், தங்களுக்கு தெரியாமல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என கூறி சமாளித்தார். ஆனால், அவரே பின்னர் மற்றொரு பேட்டியில், 30 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க நிறுவனத்திடம் பணம் கொடுத்து விருது வாங்கினேன் என்றும் உளறினார். இதனால், இந்த போலி பட்டமளிப்பு விழா விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதையடுத்து, காவல்துறை வாக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டது. நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து தேடி வந்தது. இதனால், நிகழ்ச்சியை நடத்திய ஹரிஷ் என்பவர் தலைமறைவானார். மேலும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரினார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி டாக்டர் பட்டம் பணத்திற்கு தகுந்தவாறு வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25ஆயிரம் வரை வாங்கிக்கொண்டு போலி டாக்டர் பட்டம் வழங்கியதம், இதுபோன்ற நிகழ்ச்சிகளின் விளம்பரத்துக்காக முக்கிய பிரபலங்களை அவர் உபயோகப்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்காக தனி புரோக்கர் கூட்டத்தையே நடத்தி வந்துள்ள ஹரிஷ் அவர்கள்மூலம் பட்டம்பெற ஆசைப்படுபவர்களை கண்டறிந்து அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பட்டங்களை வழங்கி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஹிரிஷ் நடத்திய 4 நிகழ்ச்சிகள் மூலம் சுமார்100க்கும் மேற்பட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]