சென்னை:
தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோல சென்னை தவிர மற்ற இடங்களுக்கு சில பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்பட்டு உள்ளது. தினசரி 200 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது,
தமிழக அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரெயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ‘ஆன்-லைன்‘ மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘ பெற்று இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.