சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக மின்னணு முறையில் பட்ஜெட் (இ-பட்ஜெட்) தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழ்நாட்டில் திமுகஅரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தமிழக 16வது சட்டமன்றத்தின் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இம்மாத இறுதியில் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். அதன்படி, மின்னனு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அதற்கு வேண்டிய சாத்தியக்கூறுகள் என்ன..? அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்றத்தில் அவர்களுக்கு முன் டச் ஸ்கிரீன் வைக்கலாமா..? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையில் டேப்லெட் கொடுக்கவும், மேலும் ஒரு கணினி கொடுத்து தொகுதிகளுக்கு வரக்கூடிய கோரிக்கை மனுக்களை மெயில் ஐடி மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகின்ற அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.