சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய லஞ்ச ஒழிப்புதுறை சோதனையைத் தொடர்ந்து, அவரது வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறைஅமைச்சராக இருந்தவர் எஸ். பி. வேலுமணி. இவர், கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பந்தங்களில் முறைகேடுகளை செய்ததாக, அறப்போர் இயக்கத்தினரும், திமுக அமைப்புச் செயலாளர் எஸ் .எஸ்.பாரதியும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்க பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ். பி. வேலுமணி வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். கோவை குனியமுத்தூரில் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி லாக்கர் சாவியை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. இந்த சோதனைகளின்போது, கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார், வங்கிக்குச் சென்று அவரது லாக்கரை திறந்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சென்னையில் இருந்து அதிகாரிகள் குழு கோவை சென்று சேதனை நடத்தியதாகவும், அதுதொடர்பாக வங்கியில் ஆவணங்களைப் பெற்று சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றனவா என்கிற விவரம் இதுவரைக்கும் வெளியிடப்படவில்லை.