சென்னை
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வர நாடெங்கும் மத்திய அரசு கடந்த மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது. ஆயினும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையொட்டி தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் மக்களுக்குச் சிரமம் உண்டானது.
இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
“வருமானம் மற்றும் பேரிடர் நிர்வாக துறை 15.04.2020 அன்று அளித்துள்ள அரசாணை 193 இன் படி அரசு கொரோனா பாதிப்புக்காக அறிவித்த தடை உத்தரவை நீட்டித்துள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெற்றோர்களிடம் கட்டணத்தை உடனடியாக செலுத்த வற்புறுத்தி வருவதாக அரசுக்குத் தெரிய வந்துள்ளது.
அரசு கவனமாக ஆய்வு செய்த பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் 2020-21 ஆம் ஆண்டுக்கான கட்டணம் மற்றும் 2019 -20 ஆம் அண்டுக்கான கட்டண நிலுவைத் தொகையை அளிக்க மாணவர்களையோ பெற்றோரையோ வற்புறுத்தக்குடாது. அத்துடன் பேரிடர் நிர்வாக விதிகள் 2005 இன கீழ் எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.