லாக்டவுனிலும் லட்சங்களை அள்ளும் கில்லாடிகள்…

ஒருபுறம் கொரோனாவினால் பலர் வாழ்விழந்து தவிப்பது அனைவரும் அறிந்ததே.  ஆனாலும் இதே ஊரடங்கு காலம் பலரை பெரிய அளவில் சம்பாதிக்க வைத்திருக்கிறது என்பதும் நிஜம் தான்.  அதிலும் லட்சக்கணக்கில்.

அகமதாபாத்தைச்சேர்ந்த ஆர்மன் பதான் ஒரு தனியார் ஒரு ஏவியேசன் நிறுவனத்தில் செக்யூரிட்டி அனலிஸ்ட்.  இந்த லாக்டவுன் நேரத்தை வீண்டிக்காமல் “பவுன்ட்டி ஹன்ட்டிங்” எனப்படும் ஆன்லைன் சாஃப்வேர், ப்ரொக்ராமிங் இவற்றிலிருக்கும் பாதுகாப்பு குறைகளை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரிக்கும் பணியில் ஈடுபட்டு இந்த மூன்று மாதத்தில் $ 25,000/- வரை சம்பாதித்துள்ளார்.  அது நமது பண மதிப்பில் ரூ. 19 லட்சமாகும்.  “இது எனது ஒரு வருச சம்பளத்தை விட அதிகம்” என்கிறார் இவர்.

இவர் மட்டுமல்ல, இவரைப்போல நிறைய இளைஞர்கள் இது போன்ற பணப்பரிசுகளை, கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்று வருகின்றனர்.  “இது ஒரு நீயா-நானா போட்டி மாதிரி” என்கிறார் இதுவரை ரூ. 26.7 லட.சம் வரை சம்பாதித்திருக்கும் அதே அகமதாபாத்தின் சைபர் செக்யூரிட்டி நிபுணர் நிகில் ஸ்ரீவத்ஸா.

இதை போன்ற பெரிய நிறுவனங்களை பாதிக்கக்கூடிய அல்லது ஹேக்கர்களினால் எளிதில் ஊடுருவிவிடக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய உதவுவது தான் இவர்களின் வேலையே.  இவர்களை போன்றோருக்கு வழங்கப்படும் பணப்பரிசுகள் அதிகமானதாக இருப்பதால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதனை பகுதி நேரமாக செய்து பணம் ஈட்டிவரும் அதே நேரம் தற்போது பலர் இதனையே முழுநேரப்பணியாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இத்துறையில் இதே போல அதிகமாக சம்பாதித்து வருபவர் ராஜ்கோட்டைச்சேர்ந்த பி்டெக் பட்டதாரியான ஜெனிஸ் சொஜித்ரா, “இப்போல்லாம் பவுன்ட்டி ஹன்ட்டிங்க்கு அதிக அளவிலான பணப்பரிசுகள் தர ஆரம்பிச்சிருக்காங்க” என்கிறார் சிரிப்புடன்.  இருக்காதா என்ன, இவர் பெற்ற பணப்பரிசு ரூ. 38 லட்சமாயிற்றே.

-லெட்சுமி பிரியா