திருவனந்தபுரம்
கேரள தொலைக்காட்சி நேரலையின் போது அதில் பங்கேற்றவர் திடீரென சுருன்ண்டு விழுந்து மரணம் அடைந்தது கடும் பரபரப்ப உண்டாக்கி உள்ளது.
பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக பிராந்திய மொழிகளில் மத்திய அரசின் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் மலையாள மொழியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. இந்த நேரலையில் கேரள விவசாய பல்கலைக்கழகத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் அனி எஸ். தாஸ் (வயது 59) என்பவரும் பங்கேற்று இருந்தார்.
இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தபோது விவசாயம் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமாகப் பதிலளித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென நேரலையிலேயே மயங்கி விழுந்தார். பதறிப்போன நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஆசுவாசப்படுத்தி அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ஏற்கனவே தாஸ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சி நேரலையின் போது பேசிக்கொண்டு இருந்தவர் அங்கேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.