துர்க்கியானா கோயில்
துர்க்கியானா கோவில், பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டிடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது.
அமைவிடம்
இக்கோயில் லோகார் வாசல் எனும் இடத்தில் துர்க்கியானா எனும் குளத்தருகே அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ் தொடருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அமிர்தசரஸ் சாலைப் போக்குவரத்து, புகையிரதம், விமானம் ஆகிய வழிகளில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர் 1921இல் குரு ஹர்சாய் மால் கபூரினால் சீக்கியர்களின் பொற்கோயிலையொத்த கட்டடக்கலையுடன் கட்டப்பட்டு பண்டிதர் மதன் மோகன் மாளவியாவினால் திறந்துவைக்கப்பட்டது.
அமிர்தசரஸ் புனித நகராக அறிவிக்கப்படாத போதிலும் இக்கோயில் மற்றும் பொற்கோயிலைச் சுற்றி 200 மீட்டருக்குட்பட்ட சுற்றாடலில் புகையிலை, மது, மாமிசம் என்பவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.