’’திறமையானவர்களுக்கு ‘டம்மி’ பதவிகளை வழங்கும் பா.ஜ,க. தலைமை’’..

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால்,  மாநில தலைவர் பதவிக்கு முட்டி மோதியவர்களில் ஒருவர் நயினார் நாகேந்திரன்.

மாநில முன்னாள் அமைச்சரான இவர், கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில்  பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு, மூன்றரை லட்சம் வாக்குகள் பெற்றவர்.

தலைவர் பதவி கிடைக்காததால் அவர் ,கட்சி மாறப்போவதாகச் செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பேட்டியில், ’’ பா.ஜ.க. மேலிடம் , திறமையான ஆட்களுக்கு ‘டம்மி’ பொறுப்பு கொடுப்பதால் அவர்கள் , கட்சியை விட்டு விலகிச் செல்கின்றனர்’’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கொதிப்புடன் கூறியதாவது:

‘’பா.ஜ.க.வில் இருந்த எஸ்.கே. வேதரத்தினம் அண்மையில் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். அதுபோல். ஆற்காடு ஆர். சீனிவாசன், அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

என்ன காரணம்?

அவர்கள் இருவருக்கும் கட்சியில் ‘டம்மி’ பதவிகளை அளித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்து கட்சியில் இருந்து விலகி விட்டனர்.’’

நான் கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்படவில்லை. குறைந்த பட்சம் பொதுச்செயலாளர் பதவியாவது தந்திருக்க வேண்டும். ஆனால் மாநில பா.ஜ.க.வின் 10 துணைத்தலைவர்களில் ஒருவராக என்னை நியமித்துள்ளனர்.’’ என்று சோக கீதம் இசைக்கிறார், நயினார் நாகேந்திரன்.

-பா.பாரதி.