சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது துலீப் கோப்பை போட்டிகளை நடத்த உத்தேசித்திருப்பது சேலத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

கடந்த இரண்டு சீசன்களாக நடைபெறாமல் இருந்த துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தி மற்றும் வட-கிழக்கு என ஆறு மண்டலங்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியை இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மற்றும் சேலம் ஆகிய மூன்று நகரங்களிலும் இந்த ஆட்டங்கள் நடைபெறும்.

துவக்க ஆட்டம் சென்னையில் நடைபெறும் என்று குறிப்பிட்ட பி.சி.சி.ஐ. அதிகாரிகள் இறுதி ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களை சேலத்தில் நடத்த முடிவெடுத்துள்ள பி.சி.சி.ஐ. அதிகாரிகள் இன்று கோவையிலும் நாளை சேலத்திலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டை புதிய நகரங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்த ஆண்டு சேலத்தில் நடத்த பி.சி.சி.ஐ. உத்தேசித்துள்ளதால் அந்த பகுதி விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.