சென்னை

மிழக அரசு சார்பில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.   நேற்று தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் அவரது மனைவி லட்சுமி பங்கேற்று வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்,

”மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதல்முறையாகத் தமிழ்நாடு பசுமை சுற்றுச்சூழல் நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பது ஒரே உலகம் என்பதை மனதில்கொண்டு, அனைத்து வகையிலும் அதைக் காக்கப் பாடுபடுவோம்”

எனத் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில் ரூ.10 நாணயத்தைச் செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தின் சேவையை துறைச் செயலர் சுப்ரியா சாஹூ தொடங்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனிஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.