ர்மபுரி

கேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. ஒகேனக்கல்லில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.