வாஷிங்டன்

திபர் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மேயர் இடையே மோதல் வலுப்பெற்று வருவதால் வெள்ளை மாளிகை பகுதி தெருவின் பெயரை மேயர் மாற்றி உள்ளார்.

அமெரிக்காவில் கருப்பரின போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.   ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பரினத்தவர் காவல்துறை விசாரணையின் போது ஒரு காவல்துறை அதிகாரியால் கழுத்தில் மிதிக்கப்பட்டார்.  இதனால் மூச்சுத் திணறி அவர் உயிர் இழந்தார்.  இதையொட்டி கருப்பரினத்தவர் தொடர்ந்து கலவரம் நடத்தி வருகின்றனர்.  கலவரத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை பகுதியில் நடந்த கலவரத்தின் போது தேசிய பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், மிளகு ஸ்பிரே போன்றவற்றை உபயோகித்து கூட்டத்தைக் கலைத்தனர்  இந்த போராட்டத்துக்கு டிர்மப் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.  போராட்டக்காரர்களை அதிகாரிகள் அடக்கவில்லை எனக் குறை கூறி வருகிறார்.

வாஷிங்டன் நகரப் பெண் மேயரான முரியல் இ ப்ரவுசர் கலவரத்தை அடக்கவில்லை என அவரை அதிபர் டிரம்ப் திறமையற்றவர் என விமர்சித்தார்.  மேலும் வாஷிங்டன் நகரம் மேயரின் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாகவும் அவர் கூறினார்.   மேலும் ப்ரவுசர் ஒரு கருப்பின பெண்மணி என்பதால் அவர் அவர்களுக்குச் சலுகை காட்டுவதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.

 

இது மேயருக்கு கோபத்தை அளித்தது.  இதையொட்டி இருவருக்கும் இடையே அறிக்கை மோதல் எழுந்துள்ளது.  இந்நிலையில் வெள்ளை மாளிகைப் பகுதியில் மாளிகைக்கு எதிரில் உள்ள தெருவின் பெயரை “பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிளாசா’ என மாற்றி உள்ளார்.  பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்பது இன வேறுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பாகும்.

 

மேலும் இந்த பெயரை அவர் சாலை முழுவதும் பெரிய எழுத்துக்களில் எழுதியும் பெரிய பேனர் வைத்தும் அறிவித்துள்ளார்.  எங்கிருந்து பார்த்தாலும்  இந்த தெருவின் புதிய பெயர் தெரியும் அளவுக்குப் பெரிய எழுத்துக்களில் சாலையில் பெயர் பதியப்பட்டுள்ளது.