மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போலி கையெழுத்திட்ட வழக்கில், நேற்று மதுரை போலீசார் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினர்.
சசிகலாபுஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள், கொடுத்த பாலியல் புகார் வழக்கில், கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்ட தாக சசிகலா புஷ்பா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று, அவர் மதுரை புதுார் போலீசார் முன் ஆஜரானார். சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பாலியல் வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனுதாக்கல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்த சசிகலா புஷ்பா, ‘மதுரை வந்து வழக்கறிஞர் முன், முன்ஜாமின் வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.
இதில் சந்தேகம் இருப்பதாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, நீதிமன்ற விசாரணைக்கு பின், செப்.,13ல் ‘வழக்கறிஞர் முன்னிலையில் கையெழுத்திட்ட தாக, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் போலி மனுதாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் மதுரை புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து, நேற்று காலை 11:45 மணிக்கு கணவர், மகனுடன் சசிகலா புஷ்பா, மதுரை புதுார் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது போலீசார், சசிகலா கணவன் லிங்கேஸ்வரன், மகனிடமும் தனித்தனியாக தலா 50க்கும் மேற்பட்ட கேள்விகளும், சசிகலா புஷ்பாவிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளும் கேட்கப்பட்டன.
விசாரணை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் டைப் செய்து ‘பிரின்ட் அவுட்’ எடுத்து சசிகலா புஷ்பா உட் பட மூவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.
பின்னர், விசாரணை முடிந்து மாலை 5:15 மணிக்கு வெளியே வந்தனர். இதற்கிடையே, முன்ஜாமின் மனுவில் இடம்பெற்றது, சசிகலா புஷ்பாவின் கையெழுத்து தானா என உறுதிசெய்வதற்காக, அவரிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கூறினர்.
ஆனால், கையெழுத்திட மறுத்த சசிகலா, ‘கோர்ட் உத்தரவிட்டால் கையெழுத்திட தயார்’ எனக்கூறி மறுத்துவிட்டார்.
வழக்கு விசாரணை குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாபுஷ்பா, ”மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, என் மீது தேவை இல்லாத வழக்குபதிவு செய்ய போலீசார் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள்,” என்றார்.
மேலும், எனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்ததற்கும், அதை நான் தக்க வைத்துக் கொண்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
முதல்வர் ஜெயலலிதா குறித்து ‘கேபியஸ் கார்பஸ்’ மனு போடுவேன் என்று நான் சொன்னது முதல், அவரது உடல்நலம் குறித்தத கவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் குறித்த சிறுதகவல்கூட வெளியே வரவழைக்கும் அளவிற்கு, இறைவன் எனக்கு இந்த பதவியை கொடுத்ததற்கும், அதை நான் தக்க வைத்துக்கொண்டதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராஜ்யசபா எம்.பி., என்ற முறையில் முதல்வரை சந்திக்கும் ஆர்வம் உள்ளது. அது கடமையும்கூட. முதல்வர் மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும். நான் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் சிலர்தான்.
பின்னால் இருந்து அவர்கள்தான் யாரையும் பார்க்கவிடாமல், கடிதங்களை கொடுக்க முடியாமல் செய்கிறார்கள் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.
முதல்வர் குணமடைந்து வந்த பிறகு, எல்லோர் பற்றியும் தெரிந்துக் கொண்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க வில்லை என்றாலும்கூட, தொண்டர்களுக்காவது நல்லது நடக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.