மூணாறு, கேரளா

மூணாறு மலைப்பகுதி பனி மூடி காணப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி அமைந்துள்ளது.   ஏரியும் தேநீர் தோட்டங்களும் நிறைந்துள்ள இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பும் ஒரு தலமாகும்.    இந்த பகுதி சில தினங்களுக்கு முன்பு இரு வேறு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டது.    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கஜா புயல் ஆகிய இரு இடர்களாலும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

தற்போது தென் இந்தியாவில் அதிகரித்து வரும் குளிர் காரணமாக மூணாறு பகுதியில் 0 டிகிரிக்கும் குறைவில் வெப்ப நிலை சென்றுள்ளது.   கடந்த சனிக்கிழமை அன்று இந்து மைனஸ் 3 டிகிரியாக வெப்ப நிலை இருந்தது.   நேற்று மூணாறை சுற்றி உள்ள செந்துவரா, சித்துவரா, மற்றும் லக்காடு பகுதிகளில் அதே மைனஸ் 3 டிகிரியும் மூணாறில் மைனஸ் 1 டிகிரியுமாக மாறி இருந்தது.

இந்த குளிரை அனுபவிக்க கடந்த இரு வாரங்களாக இந்த மூணாறு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.   தற்போது அங்கு உறை பனி  படர்ந்து தேயிலைச் செடிகளும் புற்கள் மற்றும் மரங்களும் பனியால் மூடப்பட்டு காட்சி அளிக்கின்றன.    அந்த தகவலால் ஆயிரக்கணக்கில் பயணிகள் கடந்த இரு தினங்களாக மூணாறுக்கு வந்துள்ளனர்.

மூணாறில் உள்ள டால் டிரி ரிசார்ட் டின் மேலாளர் அஜு ஆப்ரகாம் மாத்தியு,”கடந்த இரு வாரங்களாக எங்கள் ரிசார்ட் நிரம்பி உள்ளது.   நிலச்சரிவும் வெள்ளமும் எங்கள் சுற்றுலாத் தலத்தை கடுமையாக பாதித்தது.   ஆனால் இந்த பனி எங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு விடுதி உரிமையாளர் ஒருவர், ”தற்போது கேரளாவில் அடிக்கடி நடந்து வரும் கலவரம் மற்றும் கடையடைப்பால் சுற்றுலாப் பயணிகள் கேரளா வரவே பயந்துள்ளனர்.  இதனால் இங்கு வழக்கமாக வரும் பயணிகளில் பலர் வரவில்லை.   இந்த வாரம் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்துள்ளனர்.   ஆனால் சென்ற வாரம் இதே நேரத்தில் பல பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்திருந்தனர்” என தெரிவித்துள்ளார்.