கடத்தப்படும் புழுக்கள். அழியும் கடல் வளம்…

சென்னையை ஒட்டியிருக்கும் எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் கடலுடன் சங்கமிக்கிறது கொசஸ்தலை ஆறு. இதன் முகத்துவாரப் பகுதியில் காணப்படும் சேற்றில்  பாலிகீட்ஸ் என்னும் ஒருவகை புழுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.  இந்த புழுக்கள். கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இதற்கு ’காஸ்ட்லி புழு’ என்ற பெயரும் உண்டு. இந்தப் புழுக்கள்தான் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு முக்கிய உணவாகும்.  மேலும், அந்தப் பகுதியில் உள்ள மண் வளத்தையும் பாதுகாக்கிறது. இந்தப் புழுவைத் தூண்டிலில் போட்டால் அரிய வகை மீன்களையும் எளிதில் மேலே வரவழைத்துப் பிடித்துவிடலாம் என்கிறார்கள் மீனவர்கள்.

இந்த பாலிகீட்ஸ் புழுக்கள் கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இதைச் சேகரித்துக் கடத்துவதற்கென்றே வட சென்னை பகுதியில் பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.  தினமும் முகத்துவாரப் பகுதிகளில் பலர் புழுக்களைப் பிடிக்கச் சேற்றுக்குள் சுற்றுவதைப் பார்க்க முடியும். இந்த புழுக்களை அளவுக்கு அதிகமாகக் கடத்தப்படுவதால் அந்தப் பகுதியில் கடல் வளமே அழியும் நிலை உருவாகியுள்ளது.

பாலிகீட்ஸ் புழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அதன் கள்ளச் சந்தை மதிப்பைப் பற்றியும் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் கோசு மணி கூறுகையில் “மீன்களின் முக்கிய உணவு ஆதாரம் இந்த பாலிகீட்ஸ் புழுக்கள். தொடர்ந்து பாலிகீட்ஸ் புழுக்கள் பிடிக்கப்படுவதால் இந்தப் பகுதியில் மீன் வளமே குறைந்துவிட்டது.  இந்தப் புழுக்கள் மருத்துவத்துக்குப் பயன்படுவதால்  கள்ளச்சந்தையில் அதிக அளவுக்கு விலை போகின்றன.

இதைக் கடத்துவதற்கென்றே ஒரு தனி கும்பல் செயல்படுகிறது. ஒரு கிலோ பாலிகீட்ஸ் புழுக்கள் சர்வ சாதாரணமாக ரூ. 20,000 அளவுக்கு விலை போகின்றன.  எண்ணூர் பகுதிகளில் இருக்கும் சில முக்கியப்புள்ளிகளின் ஆசியில் பல ஆண்டுகளாகவே இவை கடத்தப்பட்டு வருகின்றன.  இதைத் தடுக்க பல ஆண்டுகளாகவே போராட்டம் நடத்தி வந்தாலும், இதுவரை எந்தவித பலனும் இல்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தக் கடத்தலைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்கிறார் வருத்தத்துடன்.

– லெட்சுமி பிரியா