ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் இன்றே பலர் குவிந்துள்ளனர்.

இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்காகப் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர்.  அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை  ஆகிய தினங்களில்  நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

தற்போது கொரோனா பரவல் முழுமையாக விலகாததால் பண்டிகை காலங்களை எச்சரிக்கையுடன் கொண்டாடும்படி மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது.  நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும்,

மேலும் பக்தர்கள்  கடற்கரையில் புனித நீராடவும் தடை விதித்துள்ளது.   ஆகவே நாளையும் நாளை மறுநாளும் கோவிலுக்குச் செல்ல முடியாது என்பதால்,  இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் கொரோனா  பரவும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.