சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா உள்பட கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு மெரினா மற்றும் அதைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
26-ம் தேதி அன்று கடற்கரை காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு ராயப்பேட்டை 1 பாயிண்ட் நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜிபி ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ (அ) வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.
டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.
பாரதிசாலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலையில் இருந்து உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுகசாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், அண்ணாசாலை, ஜி.பி.ரோடு, ராயபேட்டை மணிகூண்டு, வெஸ்ட் காட் சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு:
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராஃப்ட், பாராகிளைடர்ஸ், பாராமோட்டார்ஸ், ஹேன்ட்கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்கவிட வரும் 25, 26 ஆகிய இரு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்கரை வரை மற்றும் தமிழக முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் ட்ரோன் மற்றும் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
