ட்டி

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால்  பல வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வனப்பகுதி முழுவதும் பசுமைக்குத் திரும்பியுள்ளது.

நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக பெய்த மழை நேற்று முதல் சற்று குறைந்தது. தொடரும் மழை காரணமாக மண் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் எல்லிநள்ளி என்ற இடத்தின் அருகிலும், கேத்தி காவல் நிலையம் செல்லும் சாலையில் இரு இடங்களிலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரியில் நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. கோத்தகிரி பேருந்து நிலையம் பகுதியில் இரும்பு குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த 2 சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் ஒரு கம்பம் சாலையின் குறுக்கிலும், மற்றொன்று ஆட்டோ ஸ்டேண்ட் பகுதியிலும் விழுந்தது. இது இரவு நேரத்தில் நிகழ்ந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலையில் ஈளாடா பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய மருந்து குடோனின் மேற்கூரை பறந்து சென்று கீழே விழுந்தது.  கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் அருகே ஷீலா என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் கொணவக்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாகப் பறந்து சென்று வீடுகள் சேதமடைந்தன.

வீடுகளில் ஒரு பகுதி இடிந்து விழுந்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு 4,100 ரூபாய் நிவாரண தொகை வழங்குவது வழக்கம் என்றாலும் மேற்கூரை பறந்து சென்று வீடுகள் சேதமடைந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க இயலாது என வருவாய்த்துறையினர் மறுத்து விட்டனர்.  பாதிக்கப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.