டில்லி

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காவல்துறை தாக்குதலால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் பல கல்வி நிலையங்களில் மாணவர் போராட்டம் நடந்து வருகிறது.  இதில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.   இங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினர் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து அங்கிருந்த அனைத்து மாணவர்களையும் தாக்கியதாகச் செய்திகள் வந்தன.

காவல்துறை சார்பில் தாங்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்ததாகக் கூறியது மறுக்கப்பட்டுள்ளது.   தங்களைப் பல்கலைக்கழக தலைமை பாதுகாப்பு அதிகாரி அழைத்ததின் பேரில் வளாகத்தில் நுழைந்து வன்முறையை அடக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   ஆனால் இதைத் தலைமை பாதுகாப்பு அதிகாரி வாசிம் அகமது கான் மறுத்துள்ளார்.

அவர், “நான் காவல்துறையினரைப் பல்கலை வளாகத்துக்கு வர அழைக்கவில்லை, மேலும் உள்ளே நுழைய அனுமதி அளிக்கவில்லை.  அத்துடன் காக்கி சீருடை அணியாத பலர் மாணவர்கள் மீது லத்தியால் அடித்தது ஏன என எனக்குத் தெரியவில்லை.  இந்த காட்டு மிராண்டி தாக்குதலில் ஒரு மாணவர் ஒரு கண்  பார்வையை இழந்துள்ளார்.  மேலும் ஒரு மாணவருக்குக் காலில் அடி பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கண் பார்வையை இழந்த மாணவர் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த காவலர்கள் அவரை தாறுமாறாக அடித்துள்ளனர்.   அந்த வளாகத்தில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன.  லத்தியால் மாணவர்களை அடித்தனர்.   அடி பட்ட மாணவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம்.  அங்கு அவர்கள் அந்த மாணவருக்கு ஒரு கண்ணில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.” எனக் கூறி உள்ளார்.