டில்லி

வாகனங்களுக்கான புதுவகை நம்பர் பிளேட் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அனத்து ரக வாகனப்பதிவுகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

நாட்டில் தற்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன.     இவைகளை பதிவு செய்த பிறகு பதிவு எண் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பதியப்படுகின்றன.    இதில் ஒரு சில நேரங்களில் போலி நம்பர் பிளேட்டுகள் சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படுவது காவல்துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

அரசு இதை தவிர்க்க புது வகை நம்பர் பிளேட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வாகன் என்னும் இந்த புது திட்டத்தின் கீழ்  ஒரு புது வகை மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.   இதன்படி ஒவ்வொரு நம்பர் பிளேட்டிலும் ஒரு புதுவகை அடையாளம் இருக்கும்.   அவ்வகை நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகனங்க்ள் பதிவு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.

எனவே இந்த புதிய வகை நம்பர் பிளேட்டுகள் எந்த வாகனத்திலும் தற்போது இல்லாததால் வாகன பதிவுகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.   இதில் மத்திய பிரதேசம்,  ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.   இந்த மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே இத்தகைய மென் பொருள் உபயோகத்தில் உள்ளது.