பெங்களூரு

பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வந்தது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வலம் வந்துக் கொண்டு உள்ளது.    அதிலிருந்து நிலவில் தரை இறங்கச் சென்ற  விக்ரம் லாண்டர் நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் இஸ்ரோவின் தொடர்பை இழந்தது.    இந்த நிகழ்வைக் காண வந்திருந்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதலையும் பாராட்டையும் தெரிவித்தார்.  இஸ்ரோ தலைவர் சிவனை அவர் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த வீடியோ வைரலானது.

இது குறித்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மஜத கட்சியின் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களிடம், “சந்திரயான் 2 திட்டத்துக்காகக் கடந்த 10-12  வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர்.  இந்த திட்டம் 2008-09 ஆம், வருடம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  திட்டத்துக்கான தொகையை அப்போதைய அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆனால் சந்திரயான் 2 திட்டத்தில் எதுவுமே செய்யாத மோடி இந்த திட்டத்தில் தமக்குப் பங்கு உண்டு எனக் காட்டி விளம்பரம்  பெற இஸ்ரோவுக்கு வந்தார்.  அவருடைய துரதிருஷ்டத்தினால் விக்ரம் லாண்டரை நிலவில் தரை இறக்குவதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தோல்வி  அடைந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜக தலைவர் டாம் வடக்கன், “குமாரசாமி தனது காயங்களைத் தானே நோண்டி திருப்தி அடைகிறார்.   இது அவருடைய குரூர் மனப்பாங்கை காட்டுகிறது.   விக்ரம் லாண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட உடன் மோடியின் மனிதாபிமான நடவடிக்கைகளை உலகமே பாராட்டி உள்ளது.    ஒரு நாட்டை ஆள்பவர் என்னும் முறையில் அவர் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளித்தார்.

அத்துடன் அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை எனக் கூறி கவலையப் போக்கினார்.   உலகில் உள்ள  பலராலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை வீரர்கள் எனப்   பாராட்டப்படுகின்றனர்.   இதற்கு பிரதமர் மோடியே காரணம் ஆகும்.  மோடியின் செய்கையால் நாடே பெருமை அடைந்துள்ளது.” எனப் பதில் அளித்துள்ளார்.