சென்னை
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பலர் பயணம் செய்யாமல் இருந்தன்ர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ஓரளவு மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் பணிபுரிபவர்கள் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ரனர். இவர்களுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் பல விதிமுறைகள் வைத்துள்ளது.
இந்த ஊழியர்களில் சிலர் மீது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கடந்த டிசம்பரில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவது, பணியில் ஒழுங்கீனம், நிறுவன எதிரிகளுடன் தொடர்பு உள்ளிட்ட காரணங்களால் 8 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இது குறித்து விசாரணை அதிகாரியிடம் விளக்கங்கள் அளித்துள்ளனர். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என கருதிய நிர்வாகம் அவர்களை பணி நீக்கம்செய்தது.
இவர்களை உடனடியாக பணியில் சேர்க்கக் கோரி மெட்ரோ ஊழியர்களில் ஒரு பிரிவினர் கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் பல ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் என்பதால் பழி வாங்கபட்டதாக ஒரு சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.