ராமநாதபுரம்

ரிவாயு விலை உயர்வால் ஓட்டல்கள் விறகு கரிக்கு மாறி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாட்டு கருவேல மரங்களில் இருந்து விறகு கரி தயாரிக்கப்பட்டு மும்பை, குஜராத், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி, ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இங்கு போதிய மழை இல்லாததால் விவசாயிகள் பலரும் கரி மூட்டம் போடுவதைக் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர்.  வேறு பகுதி கரிகளை விட ராமநாதபுரம் மாவட்ட கரிகளில் கார்பன் 80 சதவிகிதம் இருப்பதால் அதிக நேரம் எரியும் திறன் கொண்டது என்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

வெளிமாநிலங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தால்கள் உள்ளிட்டவற்றில் கரி அடுப்பு அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  தவிர குளிரை போக்கவும் கரியை எரித்து பயன்படுத்துகின்றனர். ஆகவே அங்கு கரியின் தேவை அதிகம் உள்ளது.  எனவே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தெளிச்சாத்தநல்லூர், பார்த்திபனூர் உள்ளிட்ட கிராமங்களில் கரி மூட்டம் மூலம் தயாரிக்கப்படுகிறது.

தற்போது எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் மீண்டும் கரி அடுப்பிற்கு மாறி வருவதால் வெளிமாநிலங்களில் கரியின் தேவை அதிகரித்து வருகிறது.  எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கரியின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் கரியின் விலை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.  தவிர தொடர் மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் இன்னமும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும் சொந்தமாக கரி பேக்டரி வைத்து கரி உற்பத்தி செய்து தங்களது மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.