புது சமையல், சுய அலங்காரம்..   ரத்தகாயங்களுடன் முடியும் கிளைமாக்ஸ்…

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள் அதிகமாகி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது ஒரு புறம் என்றால்,  ,இன்னொருபுறம், வேறுவிதமான வித்தியாசமான சம்பவங்கள், அய்யகோ என்று சொல்ல வைக்கிறது.

எல்லாம், லாக்டவுனால் வெளியே போகமுடியாமல் சமையலில் இறங்கி திறமையைக் காட்ட ஆரம்பித்தவர்கள் எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிக் கதறுகிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப் பெறும் மருத்துவர்கள் சொல்வதைக் கேட்போம்.

‘ தினம் கைகளில் சிறு சிறு ரத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு ஓடிவருகிறார்கள் கணவர்கள்..  எல்லாம் சமையலறையில் நடக்கும் விபத்துகள் தான் காரணம்.  இந்த ஊரடங்கினால் பொழுது போகாமல் செய்வதறியாத கணவன்மார்களின் புகலிடம் சமையலைத் தான் தற்போது.  தினமும் சமைக்கிறேன் பேர்வழி என்று சாகசம் செய்ய நினைத்து கைகளில் சூடு போட்டுக்கொள்வதும், கத்தியால் விரல்களை வெட்டிக்கொள்வதும் வழக்கமாகிவிட்டதாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

“ஒரு வாரத்தில குறைஞ்சது மூனு கேஸாவது வந்திடுதுங்க இது மாதிரி” என்று கூறும் டாக்டர் சாய் சுரேந்தர், “இவங்கள பார்த்த ஆர்வத்தில ஒரு நாள் பிரியாணி பண்றேனு சமைக்க ஆரம்பிச்சு நானும் கைல கொதிக்கிற எண்ணைய ஊத்திக்கிட்டேன்.  இப்போ இது எனக்கு ஒரு பழக்கமாவே ஆகிடுச்சு.  முதல் நாள் சமைக்கிறது.  அடுத்த நாள் இங்க ஹாஸ்பிடல் வந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறதுன்னு” என்று சிரிக்கிறார்.

“எல்லா கணவர்களும் சொல்லி வெச்ச மாதிரி ஆன்லைன்ல பார்த்து புதுசா ஏதாவது டிஷ் ட்ரை பண்றேன்னு இறங்கித் தான் இப்படி காயம் பட்டு வந்து நிக்கிறாங்க” என்று சொல்பவர், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அவசரப்பிரிவு தலைமை டாக்டர் ஜெயராமன்.

இத்துடன் இன்னொரு புதுவிதமான கேஸ்களும் வந்த வண்ணம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் டாக்டர்கள்.  அது குழந்தைகள் விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது, கதவுகளில் கைகளை நசுக்கிக்கொள்வது போன்றவையும் தான்.  குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களையும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பெற்றோர்கள்.

பெண்களும் அவர்களின் பங்கிற்கு தங்களை காயப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.  பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டிருக்கும் இந்த சூழலில் தனக்கு தானே மேக்கப் செய்து கொள்ள முயற்சித்து க்ரீம், லோஷன் போன்றவற்றை பயன்படுத்தத்தெரியாமல் தோல் அலர்ஜி, கெமிக்கல் ரியாக்சனால் முகம் வீங்கிப் போவது போன்ற பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு வருகின்றனராம்.

இதுபோன்ற தருணங்களில்  எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

– லெட்சுமி பிரியா