ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தையொட்டி ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று இந்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதன்பிறகு மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசின் நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் நாளை இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடம் முடிய உள்ளது.
ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி, “நாளைய தினத்தை ‘கறுப்பு நாள்’ எனப் பிரிவினை வாதிகளும் பாகிஸ்தான் ஆதரவாளர்களும் அனுசரிக்கப்போவதாகத் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
ஆகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்து பொதுச்சொத்துக்கும் மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் போராட்டம் நடக்கும் என அத்தகவல்கள் எச்சரித்துள்ளன.
இதையொட்டி ஸ்ரீநகரில் மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைத்தவிர மற்றபடி மக்கள் நடமாட்டங்கள் இன்றும் நாளையும் தடை செய்யப்படுகின்றன.” என அறிவித்துள்ளார்.