டில்லி

இந்தியா புலிகள் மனிதர்கள் தொல்லைகளால் பெரிதும் மன அழுத்தம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பந்தாவ்கர், கன்ஹா, சரிஸ்கா மற்றும் பன்னா ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளன. இந்த சரணாலயத்தில் கன்ஹா அளவில் பெரியதாகும். அதே நேரத்தில் இங்கு புலிகளின் எண்ணிக்கையும் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவுக்கு சமமாக ரஷ்யாவிலும் புலிகள் அதிக அளவில் வசிக்கின்றன.

இந்திய – ரஷ்ய அணி சமீபத்தில் இரு நாட்டு புலிகளுக்கும் இடையில் உள்ள வாழ்க்கை ஒற்றுமை மற்றும் வேற்றுமை குறித்து ஆய்வு நடத்தியது. அதில் புலிகள் சரணாலயத்தின் அளவு, புலிகளின் எண்ணிக்கை, வாழ்க்கை முறை மற்றும் மனநிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த் ஆய்வின் முடிவை சமீபத்தில் இந்த குழுவின் தலைவரான கோவிந்தசாமி உமாபதி வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “இந்தியாவை இட அதிக அளவில் புலிகள் ரஷ்யாவில் உள்ள சரணாலயங்களில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இந்தியாவை விட ரஷ்யாவில் உள்ள சரணாலயங்களில் பரப்பளவு அதிகம் என்பதால் அது ஒரு பொருட்டாக இல்லை. ஆனால் இந்தியாவில் குறைந்த பரப்பளவில் அதிகம் புலிகள் வசிப்பதால் அவைகளுக்கு இடமின்மை இந்தியாவில் அதிகமாக உள்ளது.

அத்துடன் மனிதர்கள் நடமாட்டம் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதனால் புலிகள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. ரஷ்யாவை விட இங்குள்ள புலிகளுக்கு மன உளைச்சல் 20% அதிகமாக உள்ளது இதனால் புலிகளுக்கு உடல்நலக் குறைவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் உண்டாகிறது. முக்கியமாக இந்த மன உளைச்சல் புலிகளின் இனப் பெருக்கத்தை பெரிதும் பாதிக்கிறது.

சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் சுற்று வட்டார ஊர்களில் உள்ளவர்கள் காட்டுக்குள் அதிகம் நுழைந்து மரம் வெட்டுதல் போன்ற நடவடிக்கைகலில் ஈடுபடுகின்றனர். அத்துடன் வாகன நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் புலிகளின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதால் இங்கு புலிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சரிஸ்காவோடு ஒப்பிடுகையில் பன்னா புலிகள் சரணாலயத்தில் குறைந்த அளவில் மனித நடமாட்டம் உள்ளது. இங்குள்ள ஐந்து பெண் புலிகளில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளன. கடந்த நான்கு வருடங்களில் இதனால் இங்கு புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சரிஸ்காவில் ஒரே ஒரு முறை மட்டுமே குட்டிகள் பிறந்துள்ளன.” என தெரிவித்துள்ளார்.