டில்லி

பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் பாஜக பேரணியில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார். வழக்கமாக சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் பாதுகாப்பில் உள்ள அரசியல்வாதிகள் வாகனங்களை சோதிக்க சில அனுமதிகளை பெற வேண்டும் என விதி உள்ளது. அங்கு தேர்தல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த முகமது மோசின் பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை இட்டார்.

அதனால் முகமது மோசின் விதிமுறைகளை மீறியதாக கூறி அவரை மாவட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்தார்.  இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ டிவிட்டரில் செய்திகள் பதியப்பட்டுள்ளன.

அந்த பதிவுகளில், “கர்நாடகாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னால் வேறு ஏதும் காரணம் இருக்கலாம் என தோன்றுகிறது. தேர்தல் கண்காணிப்பாளர்கள் பிரதமரின் வாகனங்களை சோதனை செய்யக் கூடாது என எவ்வித சட்டமோ விதிமுறைகளோ இது வரை கிடையாது. முகமது மோசின் அவருடைய கடமையை செய்துள்ளார்.

யாரும் பார்வையிடக்கூடாத அளவுக்கு பிரதமர் மோடி தனது ஹெலிகாப்டரில் எதை எடுத்துச் சென்றார்? அத்துடன் மோடியின் ஹெலிகாப்டரில் ஒரு பெட்டி ஒன்று கைப்பற்றப் பட்டதாக செய்திகள் வெளியாவது உண்மையா? உண்மை என்றால் அதில் என்ன இருந்தது? இனி பிரதமர் வரும் ஒவ்வொரு விமானத்தையும் தேர்தல் ஆணையம் சோதிக்குமா?” என கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளது.