ஹாங்காங்
ஹாங்காங் நகரில் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக அங்கு போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கிரிமினல் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் மசோதாவை எதிர்த்துக் கடந்த ஐந்து மாதங்களாக ஹாங்காங் நகரில் தொடன்ர்ஹ்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆயினும் போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கொடுமைகள் குறித்துத் தனி விசாரணை நடத்த வேண்டும் எனப் போராட்டம் தொடர்கிறது.
தற்போது அங்கு ஹாங்காங் சர்வதேச பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக் கொள்ள இந்தியாவின் பாட்மிண்ட்ன் வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ், ரான்கிரெட்டி, பிவி சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், ச்வுரப் வர்மா, மற்றும் பாருபல்லி காஷயப் ஆகியோர் சென்றுள்ளனர்.
அங்கு நிலவி வரும் போராட்டம் காரணமாக இந்திய வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிராக் ஷெட்டி, “நாங்கள் விமானத்தில் இருந்து இறங்கியதுமே நாங்கள் இங்கு எப்படி இருக்க வேண்டும் என்னும் விதிமுறைகள் அளிக்கப்பட்டன. நாங்கள் கூடியவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
நாங்கள் தங்கி உள்ள விடுதிக்கு அருகில் சில இடங்களில் போராட்டம் நடைபெறுவதால் அங்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் தங்கிய விடுதி போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்குக்கு வெகு அருகில் இருந்தும் எங்களை நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் இங்கு வரும் போது இங்குள்ள சிம் ஷா சுய் என்னும் மாலில் உள்ள உணவகத்துக்கு இரவில் செல்வது வழக்கமாகும்.
ஆனால் அந்த பகுதியில் போராட்டம் நடப்பதால் நாங்கள் செல்லக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எங்கள் விடுதிக்கு அருகில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு செல்ல நினைத்திருந்தோம். ஆனால் போராட்டம் காரணமாக அது மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.