மைசூரு

கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகக் கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது.    கேரளாவில் வயநாடு பகுதியில் கபினி ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.   இதனால் கரையோர கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.   சென்ற வருடம் இந்த பகுதி வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த பகுதி கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கபினி அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.   இதன் முழு உயரமான 2,284 அடியில் தற்போது 2,279 அடி வரை நீர் உள்ளது.

கபினி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 15,861 கன அடியாகவும் வெளியேற்றும் நீர் வினாடிக்கு 16,500 கன அடியாகவும் உள்ளது.  கேரள எல்லையில் உள்ள குப்பே பகுதியில் கபினி ஆற்றுக்கு இடையே நடைபெறும் படகு போக்குவரத்து முழுவதுமாக நி|நிறுத்தப்பட்டுள்ளது.   இந்த  பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து மழை  பெய்து வருகிறது.   இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் பயிறிடப்பட்டிருந்த நெல், சோளம், இஞ்சி போன்ற பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.   இந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.