ராஜ்கோட்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த சில நாட்களாகக் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகள் வெள்ளக்காடாக ஆகி உள்ளன.  இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.  பல முக்கிய சாலைகளிலும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  இந்த மக்களைத் தேசிய பேரிடர் மீட்புப் பணியானர் மீட்டு வருகின்றனர்.  மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் வெள்ளம் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர்.

இதைப் போல் ஒடிசா மாநிலத்திலும் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  புகழ்வாய்ந்த ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ள பூரி மாவட்டத்தில் 34 செ மீ மழை பெய்துள்ளது.  இங்கு கடந்த 87 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இந்நிலையில்  வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.