திருவனந்தபுரம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு  ஆகிய  மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது.  இந்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கோட்டயம் அருகே பூஞ்சார் பகுதியில் கேரள மாநில அரசுப்பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுநர் இருக்கை வழியாக மீட்கப்பட்டுள்ளனர்.  இதைப் போல் தொடுபுழாவில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் பலியானார்கள்.

மேலும் கோட்டயம் – கொல்லம் இடையே சாலைகள் வெள்ள நீரில் அரிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வழி நெடுகிலும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன.   கேரளாவின் நெற்களஞ்சியமான குட்டநாடு பகுதியில் நெல் வயல்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் நெற்பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.