பொள்ளாச்சி
கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த அருவி கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். நேற்று முன் தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அருவி திறக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்தனர்.
அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஞயிறு அன்று மாலை நேரம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குக் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாறைகள், மரக்கிளைகள் அடித்து வரப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் அருவியை மூடினர். அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.