சென்னை

மிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் பண்டிகைகள் வருவதால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,81,027 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,783 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,436 பேர் குணமடைந்து மொத்தம் 26,26,352 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால் கொரோனா பரவல் மேலும் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.   இது குறித்து தமிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் இதுவரை 33 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.  இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள குடிசைப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர்.  ஆனால் டெங்குவாக இருந்தாலும் கொரோனாவாக இருந்தாலும் அவற்றைக் குணப்படுத்தும் வல்லமை தமிழ்நாட்டு மருத்துவர்களிடம் உள்ளது.

கொரோனாவை திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாமக்கல் மாவட்டங்களில் கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.  தற்போது பண்டிகைக் காலங்கள் வருகிறது.  எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தி உள்ளார்.