சென்னை

பாஜகவுக்குத் தேர்தல் தோல்வி வரும் என்றால் வருமானவரித்துறை சோதனை நடத்தும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.   இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.    திமுக மற்றும் அதிமுக அணிகள் மாநிலம் எங்கும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.   கருத்துக் கணிப்பு அடிப்படையில் திமுக அணி முன்னிலையில் உள்ளது.

இன்று காலை முதல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.    சட்டப்பேரவை தேர்தல் மிகவும் நெருங்கி வரும் வேளையில் எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இது குறித்துப் பல அரசியல் தலைவர்கள் இந்த வருமான வரி சோதனைகளை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற்காக நடத்துவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு வருமானவரித்துறை போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள், மருமகன் உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “பாஜக தனக்குத் தோல்வி ஏற்படும் என  நிலை வந்தால் இது போல வருமானவரிச் சோதனை நடத்தும்.  இதுவே அக்கட்சியின் வழிமுறை ஆகும்” எனப் பதிந்துள்ளார்.