பெங்களூரு

பொருளாதார மந்த நிலையால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு 30% மேல் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையால் நாடெங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  பல தொழில்கள் நசிந்து இதனால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.    இந்தியாவின் தொழில் நகரங்களில் ஒன்றான பெங்களூருவையும் இந்த பாதிப்பு விட்டு வைக்கவில்லை.   சொல்லப்போனால் பெங்களூருவில் இந்த பாதிப்பு கடுமையாக உள்ளது.  இந்த பாதிப்பு பெரிய  நிறுவனங்களில் இருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களிலும் உள்ளது.

இதில் குறிப்பாக ஆட்டோமேடிவ், ஜவுளி மற்றும் உற்பத்தித் துறை கடும் பாதிப்பு அடைந்துள்ளது.    பெங்களூருவின் மிகப் பெரிய தொழிற்பேட்டையான பீன்யா தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் ஒரு ஷிஃப்ட் கூட இயங்கவில்லை.  பெங்களூர் நகரில் இதனால் சுமார் 30%க்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர்.  இவர்களில் பலர் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் முறை இட்டுள்ளனர்.

பீன்யா தொழிற்பேட்டை சங்க முன்னாள் தலைவர் மைலாத்ரி ரெட்டி, “இந்தப் பகுதியில் 10000 நடத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கலியங்கி வந்தன.   இப்போது அவற்றில் 40 முதல் 50% நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  இவற்றுக்குக் காரணம் ஆர்டர்கள் கிடைக்காதது மற்றும் நிலுவைத் தொகை வராதது ஆகியவை ஆகும்.    இந்த தொழிற்சாலைகள் முன்பு வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரம் இயங்கி வந்தன.

தற்போதுள்ள நிலையில் 8 மணி நேரத்துக்கான பணிகள் கூட இல்லாத நிலை உள்ளது.    பலர் பணி இன்றி அனுப்பப்பட்டுள்ளனர். பணியில் உள்ளோருக்கு ஊதியம் அளிப்பதும் கடினமாக உள்ளது.   ஒவ்வொரு வருடமும் தீபாவளி அல்லது தசராவை ஒட்டி போனஸ் கொடுத்து விட்டு வேலைப்பளு காரணமாக விடுமுறை அளிக்க மாட்டோம்.  தற்போது தொடர் விடுமுறை அளித்துள்ளோம்.   ஆனால் போனஸ் கொடுக்க பணம் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.