மும்பை

சரா மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.   அதிலும் குறிப்பாகச் சொகுசுக் கார்கள் விற்பனை அடியோடு முடங்கியது.   இதனால் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன.   பல பெரிய நிறுவனங்களும் இந்த தாக்கத்தில் இருந்து தப்ப முடியவில்லை.   அவற்றில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசுக் கார்கள் இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.   புனேவில் உள்ள சாகான் பகுதியில் இந்த நிறுவனத்தின் சொகுசுக் கார்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.   சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையிலும் விற்பனை சரிவால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிறுவனத்துக்கு 47 நகரங்களில் 94 விற்பனை மையங்கள் உள்ளன.

தற்போது நாட்டில் விழாக்கால விற்பனை நடந்து வருகிறது.   தசரா, நவராத்திரி பண்டிகை காரணமாக நடக்கும் இந்த விற்பனை மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு சற்று ஒளியை அளித்துள்ளது.   தசரா தினத்தன்று மும்பையில் ஒரே நாளில் 125 கார்கள் விற்கப்பட்டுள்ளன.  அத்துடன் குஜராத் மாநிலத்தில் 74 கார்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை ஒட்டி 10 நாட்களில் விற்பனை ஆகி உள்ளது.