டில்லி
கொரோனா தாக்கம் காரணமாகத் தொழிலாளர்களின் வருமான 17% குறைந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலர் பணி இழந்துள்ளனர். குறிப்பாகத் தொழிலாளர்கள் ஊதியம் குறைந்து வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர். இது குறித்து பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் கொரோனா ஓர் ஆண்டு என ஒரு ஆய்வு நடந்தது.
அந்த ஆய்வின் முடிவில் காணப்படுவதாவது :
சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் நாடு முழுவதும் 10 கோடிபேர் வேலைவாய்ப்பை இழந்தனர். அவ்வாறு வேலையிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாதத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்தனர், ஆயினும், ஏறக்குறைய 1.50 கோடி பேருக்கு இன்னும் வேலைகிடைக்கவில்லை.
தனிநபர் வருமானத்தை பொருத்தவரை 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத தனிநபர் வருமானம் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.5,989 ஆக இருந்தது. ஊரடங்கு நடவடிக்கைக்குப் பின், ரூ.4,979 ஆகக் குறைந்து, மாத சராசரி வருமானம் 17 சதவீதம் குறைந்துள்ளது.
ஊரடங்கு நடவடிக்கைக்குப்பின், ஊதியம் பெறும் பிரிவில் இருக்கும் பணியாளர்களில் பாதிப்பேர், அமைப்புசாரா தொழிலுக்கும், 30 சதவீதம் பேர் சுயதொழிலுக்கும், 10 சதவீதம் பேர் கூலி வேலைக்கும், 9 சதவீதம் பேர் அமைப்பு சாரா கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர். இவ்விகிதம் மதம் மற்றும் சாதிக்கு ஏற்றார்போல் மாறுபடுகிறது.
குறிப்பாக மாத சராசரி ஊதிய இழப்பில் சுயதொழில் புரிவோர், அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர் அதிகமான ஊதிய இழப்பைச் சந்தித்தனர். குறிப்பாக ஏழை மக்களின் வருமானம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த ஏழை மக்கள் பிரிவில் 20 சதவீதம் பேர் 2020 ஏப்ரல் மே மாதங்களில் முழுமையான வருமானத்தை இழந்தனர்.
ஆனால் பணக்காரர்கள் தரப்பில் வருமான இழப்பு என்பது கொரோனாவுக்கு முன்பு ஒப்பிடும்போது சிறிது குறைவாக இருந்தது. கடந்த 2020 மார்ச் முதல் அக்டோபர்வரை, சராசரி குடும்பத்தின் வருமானம் 10 சதவீதம் அல்லது ரூ.15,700 ஆகக் குறைந்துள்ளது . கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த மாநிலத்துக்கும், அங்கு ஏற்பட்ட வேலையிழப்புக்கும் இடையே அதிகமான தொடர்பு இருக்கிறது.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, டெல்லியில் அதிகமான கொரோனா பாதிப்பும், வேலையிழப்பும் இருந்தது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பெண்கள், இளம்வயதில் வேலைபார்க்கும் பிரிவினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். ஊரடங்குக்குப்பின் 61சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, 7 சதவீதம் பேர் வேலையை இழந்துள்ளனர்.
இதில் பெண்கள் பிரிவில் 19 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை, 47சதவீதம் பேர் நிரந்தமாக வேலை இழந்துள்ளனர். 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கும் தொழிலாளர்களில் 33 சதவீதம் பேருக்கு 2020 டிசம்பர் வரை வேலை கிடைக்கவில்லை. 25 வயதுமுதல் 44 வயதுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை.” எனக் காணப்படுகிறது.